728x90 AdSpace

Latest News
Wednesday, April 21, 2010

நதிமூலம்

பூமியோடு மனதுக்கிருக்கும் தொடர்புகளைத் துண்டித்துவிட்டு ஆழ்ந்த உறக்கமெனும் ஆழியில் அமிழ்ந்து ஆழம் நோக்கி உடல் நழுவிக் கொண்டேயிருக்கும் நள்ளிரவுகளில் மாதத்தில் சிலநாள் என் தொலைபேசி அழைக்கும். எடுத்தால் ''நான் கனடாவிலிருந்து கதைக்கறன்'' என்றொரு பெண்குரல் ஒலிக்கும். முகம் தெரியாத அந்த ஈழத்துச் சகோதரி என்னை அடிக்கடி கேட்கும் கேள்வி : ''எப்போதெல்லாம் கவிதை எழுதுகிறீர்கள்? கவிதைக்கு எது உந்து சக்தி'' என்பதுதான். உறக்கக் கலக்கத்தில் ஒரு நாளும் சரியான விடை சொன்னதில்லை. கவிதையில் சொல்ல முடிகிறதா பார்க்கிறேன்.

எப்போதெல்லாம் மனதில்
உருவம் தெரியாத
பனிமூட்டமொன்று
உலவிக் கலைகிறதோ

இதயக்கல் எப்போதெல்லாம்
குழைந்து குழைந்து
கூழாகிறதோ

உடனடியாக
உருகவில்லையெனில்
உயிர் கெட்டிப் பட்டுவிடுமென
எப்போதெல்லாம் உள்ளம் எச்சரிக்கிறதோ

ஒரு கண்ணீர் ஆறவிட்டு
இன்னொரு கண்ணீருக்கு
மனது எப்போது தயாராகிறதோ

தூக்கம் - விழிப்பு
இரண்டுக்கும் மத்தியில்
மனமென்னும் பட்டாம்பூச்சி
எப்போது பறக்கிறதோ

கோபத்தின் சிகரத்தில்
துக்கத்தின் அடிவாரத்தில்
எப்போது மனது கூடாரமடிக்கிறதோ -
அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும்

0

ஒரு மொட்டு உடையும்
சப்தம் கேட்க
எப்போது பூமி நிசப்தமாகிறதோ

கூட்டுப் பறவைகளின் முதல்பாடல்
அதிகாலை இருட்டை
எப்போது உடைக்குமோ

எப்போதெல்லாம்
என் ஜன்னலுக்குப் பக்கத்தில்
மழை பெய்கிறதோ

ஆற்றுக்குள் யாரோ
துணிதுவைக்கும் சுதியில்
சேர்ந்தோ சேராமலோ
குயில்பேடு எப்போது
கூவித் திரியுமோ

கூப்பிடுÀரத்தில்
கூடவே நிலா வர
பழைய சாலை வழி எப்போதெல்லாம்
பயணம் நிகழ்கிறதோ

அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும்

0

இந்த பூமியின்
ஏதேனுமோர் அசைவு
எப்போதென்னை அசைக்கிறதோ

சின்னஞ்சிறு வயதுமுதல்
உள்நெஞ்சில் அப்பி
உறைந்திருக்கும் படிமங்கள்
உரிந்துரிந்து
எப்போது முகம்காட்டுமோ

இதயம் துலக்கும் சில புத்தகங்களால்
எப்போது மூளையில் தீச்சுடர் மூளுமோ

இயற்கையின் இயற்கையோ
மனிதரின் செயற்கையோ
இன்னோர் உயிரை
எப்போது இம்சிக்குமோ

உயிரில் விழுந்த முடிச்சுகளை
இசையென்னும் மாயவிரல்
எப்போதெல்லாம் அவிழ்க்கிறதோ

எப்போதெல்லாம் நான்
சாகவில்லையென்பதற்குச்
சாட்சி கோரப்படுகிறதோ -

அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும்

0

கடக்கும் பெண்களின்
எனக்கான நாணம்

இடுகாட்டில் நேரும்
இடைக்கால சோகம்

குழையும் குழந்தைகளின்
உடைந்த சிரிப்பு

பூமிக்கிண்ணத்தில்
சொட்டிக்கொண்டேயிருக்கும்
காலத்துளிகளின் ஓசைகள்

நிலத்தில் புதையும் துக்கம்
நிலவை முட்டும் உற்சாகம்

இவைபோல் இன்னபிற
சொல்லும் என்னைக் கவியெழுத.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: நதிமூலம் Rating: 5 Reviewed By: Blank